அதிகாலையில் என் கைபேசி
அழைக்கிறது இனிய ஓசையுடன்!
தெரிந்து விட்டது என் வீட்டில்
உதவிக்கு வரும் நளினிதான்!
நேற்றே சொல்லியிருக்கலாம்
வேலைக்கு இன்று வர இயலாதென்று!
தலைசுற்றலாம்..! காய்ச்சலாம்!
மெலிவான குரலில் சொல்கிறாள்!
இன்று வேலைக்கு வரமாட்டாளாம்,
மட்டம் போட்டு விட்டாள் என்று
தெரிந்து போயிற்று! மனம் வலித்தது!
எரிச்சலினால் உடல் சோர்ந்தது!
நாங்கள் வசிக்கும் சுங்கம் பகுதி
எங்கும் இன்று மின்சாரத் தடை!
காலை 9 முதல் மாலை 6 வரை
துணை மின்நிலைய பராமரிப்பாம்!
நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு
குழாய்களில் தண்ணீரும் வராதாம்,
இன்று என் மனநிலை சரியில்லை,
யாரைச் சொல்லியும் குற்றமில்லை!
மதிய உணவு 'அன்னபூர்ணா'வில்!
ப்ரூக்பாண்ட் மாலில் மதியக் காட்சி,
திரைப்படம் ஒரு தண்டச் செலவுதான்,
வேறு வழியில்லை! விதி போகும் வழி!
மாலில் பாஸ்கின் ராபின்ஸ் பனிக்கூழ்
ஒரு சிறு குவளை விலை ரூபாய் 130 மட்டும்..!
ஒரு கிண்ணம் சோளப்பொறி ரூபாய் 70 தான்..!
இரு கையளவே; விலையோ பயம் காட்டும்!
அதோ அங்கே யாரவள்?
பார்த்த முகமாய்த் தெரிகிறதே!
என் வீட்டில் வேலை செய்யும் நளினி,
எனக்கு மூன்று வரிசைகள் முன்னாலே!
அதே திரைப்படம் தில்லு முல்லு!
மங்கிய வெளிச்சத்தில் மகனுடன் அவள்,
ஒரு கையில் பனிக்கூழ்,
இரு கிண்ணங்களில் சோளப்பொறி!
நானங்கே எதுவும் வாங்கவில்லை,
நானே தயாரித்த தீபாவளிப் பட்சணங்கள்..!
என் இரண்டு ஆசை மகள்களும், நானும்
முகம் வாடப் பகிர்ந்து கொண்டோம்!
வழக்கம்போல மறுநாள் காலை நளினி
'ஜன்டுபாம்' தைலத்தின் வாசமும்
இறுகிய முகமுமாக வந்து விட்டாள்,
முகத்தில் வாட்டத்தைக் காட்டி!
அம்மா! தலைசுற்றலும், காய்ச்சலும்
நேற்று முழுக்க விடவில்லை எனக்கு,
இன்று மாலையில் டாக்டரிடம் போகணும்
ரூபாய் 300 கொடுங்கள் என்றாள்!
நான் ஒரு தலைமை ஆசிரியை!
நளினி சொல்லும் பொய்யையும்
நடிப்பையும் வெளிக்காட்டாமல்
எனக்குள் விழுங்க வேணும்!
வீண்செலவு செய்ய நான் தயங்கினாலும்
அழுதுதான் தீரவேணும் நளினிக்கு!
அன்று ராசிபலனில் போட்டிருந்ததே
இன்று தண்டச்செலவு! உண்மைதான்!
Ref: லூயிஸ் சந்தனாவின் Two women's day out.