மீண்டும் ஒருமுறை! * Poem by Subbaraman N V

மீண்டும் ஒருமுறை! *

!
(தமிழில்) என் வி சுப்பராமன்
(மூலம்-மணிப்புரி மொழியில்) டாக்டர் எம் ப்ரியப்ராதா சிங், மணிப்பூர்

அவள் எனது குழந்தைகளின் அன்னை!
அவள் எதிர்க்கிறாள்;
இடி முழக்கம் செய்கிறாள்
காரணம் சொல்ல மறுக்கிறாள்
உள்ளங்கைகளால் தன்
நெற்றிக்குத் திரை இடுகிறாள்
இறைவனை, கவிதையை, தன் விதியைச் சபிக்கிறாள்
அறிவிலன் - என்னை மணந்ததிற்காக!

அவளுக்கு பதில் கொடுக்க
வாய்ப்புத் தரவில்லை
அவளது கண்ணீருக்கு விடைகொடுக்க,
நொடிப் பொழுதும் கிடைக்கவில்லை;
அவலம் படைத்த நான் அவளிடம்
ஒரு மனிதனாக
"அவளை விரும்புகிறேன்" என்று
அறியச் செய்யவும் முடியவில்லை!

உயர்ந்தோர் தாழ்ந்தோர்
அனைவரிடம் சென்றேன்
"அறிவிலியா என அறிவதற்காக"
அனைவரும் சொன்னது "ஆம்" என்ற சொல்லே!

ஆம்; நீ
கலைதனைக் காதலிக்கும் உணர்ச்சி அறிவிலி
எழுத்தாளன் என்பதால் என்றும் வறியவன்!
கவிஞன் ஆனதால் ஆதரவற்றவன்!
கவிதை என்றும் பணம் தருவதில்லை
பணமற்று நீ பயித்தியமாவாய்!
அப்படியே இருப்பாய் நிரந்தரமாக!

எனது வாழ்வின் இறுதியில்
எனது மனைவியின் மீளாத மெளனம்
காதொடு காதாய் ரகசியம் சொன்னது
"அன்பே! நீ உயர்ந்தவன்!
கவிதையை என்றும் கைவிட்டு விடாதே"!

நிர்மலமான வானைக் கேட்டேன்:
நான் ஒரு அறிவிலியா?
மலர்கள் சொல்லின "இல்லை"யென;
நீரும் அலையும், காற்றும்
சொல்லின "இங்கே இல்லை"யென.
மழையும் நதிகளும், வான வில்லும்
சொல்லின ""இங்கும் இல்லை"யென;
குருடர்களும், பிச்சைக்காரர்களும், கொத்தடிமைகளும் தலை அசைத்தனர்
"எப்பொழுதும் இல்லை, எப்பொழுதும் இல்லை"யென.
காயப்பட்டு இறக்கும் புட்கள் யாவும்
கீதம் இசைப்பது பயனற்று இல்லை!

நமது குருதியை மையாக்குங்கள்
நமது இறப்பைக் கவிதையாக்குங்கள்
நொறுங்கிப்போன மனிதத்தை பிணைத்துவையுங்கள்!

மீண்டும் ஒருமுறை
மெளனம் கீதம் இசைக்கும்பொழுது
அங்கே, அப்பொழுது
உருவாகிறது ஒரு கவிதை!

Thursday, January 29, 2015
Topic(s) of this poem: Art
POET'S NOTES ABOUT THE POEM
The poem that was presented by me inthe National Symposium of Poets by All India Radio on 25th Jan.2015
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subbaraman N V

Subbaraman N V

Karaikkudi - Tamilnadu- India
Close
Error Success